தமிழ்நாட்டிற்குள் உள்நுழைய கடவுச்சீட்டு தமிழ் என்று நரேந்திர மோதியின் தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் கூறியிருக்கலாம். அதனால் அவர் அப்படிப் பேசுகிறார் என நினைக்கிறேன். ஆனால், அவரது செயல்பாடுகள் அவரது பேச்சுக்கு முரணாக இருக்கிறது. இந்தியா பல மொழிகளைப் பேசக்கூடிய ஒரு நாடு. அதற்குரிய உரிமை, சமத்துவத்தை நிலைநாட்டுங்கள் என்றுதான் கூறுகிறோம்.
இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழர்கள்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலைமை மாறிவிட்டது. இப்போது இந்திய ஒன்றியம் முழுவதும் பல தேசிய இனங்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட தொடங்கிவிட்டன. எங்களை போன்ற செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல. பல மாநில அரசுகளே தங்களது மொழியை காக்க சட்டம் இயற்றி உள்ளன.
2016ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தங்களுடைய மொழியை கற்பிக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றி இருக்கிறார்கள். அரசாணை பிறப்பித்து இருக்கிறார்கள்.
இந்தி திணிப்பின் வேகம் அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது. இந்தி தங்கள் தாயக மொழியை விழுங்கிவிடுமோ என்ற அச்சத்தில்தான் அந்த அரசுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
தமிழ்நாடு 50 ஆண்டுகளுக்கு முன்பே இரு மொழி கொள்கை மூலம் இந்தி திணிப்பை தடுத்தி நிறுத்திவிட்டது. மற்ற மாநில அரசுகளும், இயக்கங்களும் இப்போதுதான் விழித்து கொண்டுள்ளன.
உண்மையில் மோதிக்கு தமிழ் மொழி மீது அக்கறை இருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை கொண்டு வர சொல்லுங்கள். தமிழை மொழியாக ஆக்க வேண்டும் என்று கோருவது ஏதோ வட இந்திய மாநிலத்தில் தமிழை பயன்படுத்த வேண்டும் என்று கோருவது கிடையாது.