புதுடில்லி: கொரோனா வைரஸுக்கு எதிராக, மத்திய அரசு, நாடுமுழுவதும் எடுத்துள்ள திடீர் ஊரடங்கு, மூடல் நடவடிக்கைகள், மக்களை பீதியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. வெளிமாநில கூலி தொழிலாளிகள் பசியுடன், தங்குமிடம் இன்றி பரிதவிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
"கொரோனாவுக்கு எதிர்த்து போராட நம்நாடு, மற்ற நாடுகளைப்போல் அல்லாமல் பல்வேறு வெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. அன்றாட கூலிதொழிலாளிகள் அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. நாடுமுழுவதும் முழுஅடைப்பு என்பது கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.தொழிற்சாலைகள், கட்டிட தொழில்கள் மூடப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு பல நூறு கி.மீ. தூரங்களை, பசியோடு கடந்து செல்கின்றனர். அன்றாட உணவு, தங்குமிடம், ஊதியம் இல்லாமல் மிகவும் துயரத்தில் உள்ளனர்.